அக்‌ஷய திருதியையும் அசட்டு க்யூவும்

~எஸ்.கே 

 

2009 ஏப்ரல் 27-ம் நாள் அக்‌ஷய திருதியை. இந்த நாளின் பெயரைச் சொன்னவுடனேயே நகைக் கடை க்யூ நினைவுக்கு வருமாறு செய்துவிட்டனர் நகை வியாபாரிகள், தங்கள் அதீத விளம்பரக் கூச்சலினால்! இதில் உலகத் தங்கக் குழுமத்துக்கும் (World Gold Council) பங்கு உண்டு என்பது வர்த்தக தினசரிகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும்.

 

ஆனால் உண்மையில் அக்‌ஷய திருதியை தினத்தன்று நிரம்பி வழியும் நகைக்கடைகளில் அலைமோதிக் கொண்டு உள்ளே சென்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. சென்ற சில பத்தாண்டுகளில் வணிக நோக்கத்தில் கிளப்பி விடப்பட்ட மாயை இது. ஒரே நாளில் சந்தைக் கடைபோல முண்டியடித்துக் கொண்டு வாங்கி தங்கத்தின் விலையை ஏற்றாதீர்கள். எதுவானாலும் தேவை என்றால் மட்டுமே வாங்குவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

அக்‌ஷய திருதியை தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்க வேண்டும் என்பதே ஐதீகம். அந்த வகையில் பார்த்தால் அன்று குறிப்பாக வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சளும், முனை முறியாத (கைக்குத்தல்) பச்சரிசி, கல்லுப்பு ஆகியவைதான்.

உண்மை இவ்வாறிருக்க நகைச் சந்தையினர் மக்களை மூளைச் சலவை செய்து அக்‌ஷய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் வாங்கினால் கூட வருகிற நாட்களில் அவர்கள் கேட்காமலேயே, கனகதாரா ஸ்தோஸ்திரம் சொல்லாமலேயே, அவர்கள் வீட்டுக் கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கம் கொட்டும் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியிருக்கின்றனர். அன்று தங்கத் துளி வாங்கி வந்து பீரோவில வைத்து விட்டால் அது தானாகவே குட்டி போட்டு கிலோ கணக்கில் பெருகி விடுமா என்ன! என் சிறு வயதில் எங்கள் கிராமத் தொடக்கப்பள்ளியில் படிக்கும்போது புத்தகத்தினிடையே மயில் இறகின் அடியில் பஞ்சை வைத்து குட்டி போடுமா என்று பார்த்துக் கொண்டிருந்தது தான் நினைவுக்கு வருகிறது!

 

காதலர் தினம் என்ற பெயரில் அடிக்கும் வணிகக் கூத்துக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை - காதலர能 தினம் இறக்குமதி செய்யப்பட்ட அசட்டுத்தனம் என்பதைத் தவிர.

அக்‌ஷய திருதியையில் தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் சேரும் என்பது உண்மையானால், போன வருடம் இதே நாளில் தங்கம் வாங்கியதற்கு இந்த வருடம் அதிக தங்கம் இவர்களிடம் தானாக வந்து சேர்ந்திருக்கிறதா? ஆனால் அவர்கள் இந்த வருடமும் தங்கம் வாங்க வரிசையில் ஏன் நிற்கிறார்கள்!

செல்போனும் பிற எலக்ட்ரானிக் சமாசாரங்களையும் வாங்கித் தள்ளும் இளைய தலையமுறை தங்கத்துக்கு அதிகம் செல்வழிப்பதில்லை என்று WGC கவலைப்படுகிறது. தங்கம் வாங்குவதற்கு இவர்களைத் தள்ளும் முயற்சியில் ஆண்டுக்காண்டு இதன் விளம்பர பட்ஜெட் அதிகமாகிக் கொண்டே போகிறது. தங்கம் வாங்கச் சொல்லும் விளம்பரங்களுக்காக 2007ல் 80 கோடி ரூபாய் செலவழித்துள்ள WGC அதுவே மிகக் குறைவு என்று அங்கலாய்த்துள்ளது.

 

பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய தங்கம் ஒரு நல்ல வழி என்று நீங்கள் கூறலாம். உண்மைதான். ஆனால், ஒரு பொருளில் முதலீடு செய்பவர் அது மிகக் குறைந்த விலையில் விற்கும் நாளன்றுதானே போய் வாங்க வேண்டும். இப்படிப் பைத்தியக்காரத்தனமாக ஒரே நாளில் போய் விழுந்து விலையை ஏற்றிவிட்டா முதலீடு செய்வார்கள்? என்றைக்குத் தங்கம் விலை குறைவாக இருக்கிறதோ அன்றுதான் அதை வாங்க நல்ல நாள் என்பதுதானே புத்திசாலித்தனம்!

இதில் வேடிக்கை என்ன வென்றால் இவர் அனைவரும் நன்கு படித்த, வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் அத்தனையும் கொண்ட உயர் / நடு மத்திய தர வர்ககத்தினரே. இவர்கள்தான் ஆட்டு மந்தைக் கூட்டங்களாக அடித்துப் பிடித்துக் கொண்டு நகைக் கடைக்கு பட்டுப் புடவையணிந்து போய் நிற்கிறார்கள்!

அக்‌ஷய திருதியை தங்க விற்பனை பற்றி உலக தங்க கவுன்சிலின் மேலாண்மை இயக்குநர் சென்ற வருடம் 55 டன் தஙகத்திற்கும் அதிக அளவு விற்பனையாயிற்று என்கிறார். இந்த ஆண்டு எல்லோரையும் பிளாட்டினம் வாங்குங்கள் என்கிறார்கள். அடுத்த மாதம் சம்பளம் வருமா என்று பலர் பயந்து நிற்கும் இன்னாளில் தங்கத்தை விட இரண்டு பங்கு விலையுள்ள பிளாடினத்தை வாங்கு என்கிறார்கள் இந்த வியாபாரிகள்!

அதிருக்கட்டும். உண்மையில் அக்‌ஷய திருதியை நாளை இந்துக்கள் எவ்விதம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்வரும் மூன்றாம் பிறை நாள் (திருதியை) அக்ஷய திருதியை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் சூரியனும் சந்திரனும் மிக வீரியத்துடன் காணப்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அக்‌ஷய என்ற சொல் குறைவற்ற மற்றும் மேன்மேலும் வளர்கின்ற என்னும் பொருள் பெறும். அள்ள அள்ளக் குறையாமல் அன்னம் பெருக்கெடுத்த அக்‌ஷய பாத்திரம் உங்கள் நினைவுக்கு வருகிறதல்லவா! புனித கங்கைத் தாய் பூமியில் இறங்கி நீர்ப் பெருக்கெடுத்தது அக்‌ஷய திருதியை அன்றுதான் என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும் இது பரசுராமர் அவதரித்த நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் எடுத்த காரியம் எதனிலும் வெற்றியே என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த நாளில் ஹோமம், ஜபம் முதலியவை செய்வதால் நம்முடைய செல்வமும் பலமடங்காகப் பெருகி வளம் செழிக்கும் என்பது நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கை. நெல் விதைக்க ஏற்ற நாளாக இது நாடெங்கிலும் கொண்டாடப் படுகிறது. புதிய கட்டிடங்களைத் துவங்க, அஸ்திவாரம் போட, கிணறு வெட்ட ஏதுவான நாள்.

 

பூரி ஜகன்னாதர் தன் சந்தன் யாத்ராவை இந்த நாளில்தான் துவங்குகிறார்.

இந்நன்னாளின் பெருமை பற்றி மேலதிக தகவல்களுடன் நன்கு விளக்குகிறது லிஃப்கோவின் இக்கட்டுரை. சென்னை வாசிகள் மயிலை இராமகிருஷ்ண மாணவரில்லத்தில் அக்‌ஷய திருதியை அன்று நிகழவிருக்கும் சண்டி பாராயணம், சரஸ்வதி மகா அபிஷேகம் போன்றவற்றில் பங்கு பெறலாமே.  ஏழைகளுக்கு நம்மால் முடிந்த பொருளுதவி செய்து இறைவன் நினைவில் பஜனை, ஹோமம் செய்து, அதன் மூலம் இறையருளை வேண்டி அக்‌ஷய திருதியை நாளைக் கொண்டாடுவது சாலச் சிறந்தது.

***********

http://www.tamilhindu.com/2009/04/akshaya-tritiya-and-rush-for-gold/

 BACK