மா ரமணன்

 

என்னைப்போன்ற வெளிநாட்டில் வசிக்கும் சென்னைவாசிகள் chlorine வாசம் (வேறு ஊர்காரர்கள் நாற்றம் என்று பொறாமையில் பிதற்றுவார்கள்) வீசும் தண்ணீர் போன்று ஏங்கும் விஷயங்களின் பெரிய பட்டியலில் டிசம்பர் மாத இசைவிழாவும் நிச்சயம் உண்டு. திருவையாத்துத் தண்ணியில் சங்கீதம் கலந்திருந்த காலமெல்லாம் போய் இன்று செம்மங்குடியும் குன்னக்குடியும் சங்கீதம் தழைக்கும்குடியான சென்னைகுடிக்கும் பெயர்ந்து விட்டனர். மயிலாப்பூர் முழுவதும் சபாக்கள் நிரம்பியிருந்தாலும் நான் விரும்பி செல்வது தமிழிசைச்சங்க நிகழ்சிகளுக்க்கே! தனி ஆவர்த்தனதின் போது அறூசுவையரசு canteen-இல் போண்டா வாங்க ஓடாமல் இசையையும் தமிழையும் ரசிக்கும் கூட்டதினிடையில் அமர்ந்து பாட்டு கேட்கும் இன்பம் கோடி கொடுத்தாலும் கிடைக்காது.


ஒருமுறை தமிழிசைக்காக கௌரவிக்கப்பட்ட புல்லாங்குழல் என்.ரமணி ஹிந்தோள ராகத்தில் கரைந்து கண்ணீர் மல்கி தனியுலகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த என்னைக் கண்ட ஒரு 60 வயதுப் பெரியவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. வாஞ்சையுடன், "இது என்ன பாட்டு தெரியுமா" என்று கேட்டார். கிழவருக்கு என் கண்ணில் தூசிவிழுந்து விட்டதா அல்லது குழலிசையை ரசிக்கிறேனா என்ற சந்தேகம் போலுமென எண்ணி "மா ரமணன் என்ற தமிழ் தியாகையரான பாபனாசம் சிவனின் கீர்த்தனை" என்றேன். ஒரு புன்முறுவலுடன் இந்தப் பாடலின் அர்தத்தையும் பாடிய சூழலையும் நான் கேட்காமலே கூறிய அந்தப் பெரியவர் போன்றொருவருக்காகவாவது சென்னையில் மழை பொய்க்காமலிருக்கட்டும்.

பராந்தக சோழன் பொன்கூறை வேய்ந்த தில்லையம்பலதுக்கு சென்றவர் ஒரு குறிப்பிட்டயிடத்தில் நின்று பார்த்தால் ஒரே சமயத்தில் அமபலத்தாடுவானையும் சேஷசயனத்திலிருப்பவனையும் காணலாம். அந்த கணத்தில் ஒரு கட்சியின் இரு கோஷ்டியினருக்கும் வேண்டப்பட்ட எம்.எல்.ஏ ஒரே சமையத்தில் இரு கோஷ்டித் தலைவரையும் கண்டால் யாரை வணங்குவது என்று தடுமாறும் நிலையை உணர்ந்த பாபனாசம் சிவன் ஒரே பாடல் மூலம் இருவறையும் புகழ்ந்து தன் பக்தியையும், தமிழறிவையும் வெளிப்படுத்தியுள்ளார். (எங்களுக்கும் கர்னாடக சங்கீததுக்கும் ரொம்ப தூரம் என்று கூறுபவருக்கு... இந்தப் பாடல் முதலில் மக்கள் மத்தியில் பிரசித்தமானது "சேவா சதனம்" என்ற படத்தில் எம்.எஸ்.சுப்புலஷ்மியின் குரலில்தான்).பாடலில் வரிகளைச் சற்று பார்ப்போம்.

"மா ரமணன்

உமா ரமணன்

மலரடி பணி மனமே- தினமே

மாற ஜனகன்

குமார ஜனகன்,

மலைமேல் உறைபவன்- பாற்கடல்

அலைமேல் உறைபவன்- பாவன

ஆயிரம் பெயரால் உரைதிடும்

ஆயிரம் உருமாறினும்

உயர் தாயின் மிகு தயாபரன்- பதம்

தஞ்சம் என்பவரை அஞ்சல் என்றருளும்"


"மா ரமணன்" என்று மஹாலஷ்மியின் மணாளனும், மாறனென அழைக்கப்படும் மன்மதனின் தந்தையும், பாற்கடல் அலைமேல் அனந்தசயனத்திலிருப்பவனுமான விஷ்ணுவையும், "உமா ரமணன்" என்று உமையவளின் அன்பிர்க்குரியவனும், குமரனென அழைக்கப்படும் முருகனின் தந்தையும், கைலாய மலைமேல் உரைபவனுமான சிவபெருமானையும் அழகான வார்த்தை ஜாலம் கொண்டு ஒரே பாடலில் புகழ்ந்து பாடி சிதம்பரத்திலிருக்கும் காட்சியை அழகாக மனக்கண்முன் நிறுத்தி விடுகிறார். ஒருகாலத்தில் இப்படிப்பட்ட பாடல்கள் திரையிசையில் super-hit பாடல்களாக விளங்கின என்பதை நினைக்கையில் ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இன்னொரு பக்கம் இன்றைய பாடல் வரிகளின் நிலையைக் கண்டு வருத்தமாகவுமிருக்கிறது.


வருடா வருடம் பாபநாசம் சிவன் ரசிகர் சபை அவர் பிறந்த நாளுக்கு இரு மாதங்கள் முன்பே பல்வேறு சிறப்புக் கச்சேரிகளையும், எல்லா வயதினருக்குமான பாட்டுப் போட்டியும் நடத்தும். இந்த வருடமும் இந்நேரம் சென்னை விழாக்கோலம் கொண்டிருக்கும்... ஹ்ம்ம்ம்... இங்கு இருந்து கொண்டு பெருமூச்சு விட வேண்டியதுதான்.

 

http://maraththadi.com/

 BACK