யுக புருஷர் சுஜாதா
- ஜ.ப.ர

>

 

பல பரிமாணர் சுஜாதாவின் மறைவை ஒட்டி வலைப்பூக்களும் இணைய தளங்களும் பல தகவல்களுடன் நினைவஞ்சலி செலுத்தின. எஸ். ராமகிருஷ்ணன் ஓர் உருக்கமான செய்தியை, வாத்தியாரே, போய் வாங்க என்று முடித்திருக்கிறார். மனுஷ்ய புத்திரன், கனிமொழி, பார்த்திபன் ஆகியோர் மரண தினத்தின் நான்காவது நாளே மகத்தான நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்திக் காட்டினார்கள். 

சென்னை நாரத கான சபாவில் நாலு மணி நேரக் கூட்டத்தில் பேசியவர்கள், சென்னை நகர யார் யார் பட்டியலில் இடம்பெறத் தக்கவர்கள். வந்திருந்த எண்ணிறந்த வாசகர்களோ, சுஜாதாவின் சின்ன சின்ன வார்த்தைகளைக்கூட தங்களுக்குள் ரசித்துப் பரிமாறிக் கொண்டிருந்தது கேட்க முடிந்தது. வழக்கமான இரங்கல் கூட்டங்களைப் போலில்லாமல், அடிக்கடி, சிரிப்பொலிகளும், கர ஒலிகளும் எழுந்தது துளிக்கூட இயல்புக்கு மாறில்லாமல் அமைந்தது. சுஜாதாவைப் பற்றிப் பேசுகையில் எப்படி உற்சாகத்தையும் நகைச்சுவையையும் விலக்க முடியும்?

இரா. முருகன் இருபது ஆண்டுகளுக்கு முன் வேலையில் சேர டெல்லி சென்றிருக்கிறார். அங்கு சாவி இதழின் விருந்தினர் ஆசிரியராக சுஜாதா தயாரித்த இதழைப் பார்க்க வாய்த்திருக்கிறது. சுஜாதா தம் கட்டுரையின் இடையில், போகிற போக்கில் எழுதியிருந்த ஒரு குறிப்பு அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சிறு பத்திரிகை ஒன்றில் அவர் எழுதியிருந்த கவிதையைப் பாராட்டி எழுதியிருந்த வரி அது. தாவை முன்னப் பின்ன அவருக்குத் தெரியாது. 

இப்படிப் பல பேரை புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் சுஜாதா. யாரையும் பாராட்டும் குணம் அவருக்கு. எவரையும் இகழ்ந்து பேசுவதில்லை. வீண் சர்ச்சைகளில் ஈடுபடுவதில்லை. 

அவரை சரமாரியாகக் கண்டனம் செய்து ஒரு எழுத்தாளர்-கவிஞர் எழுதிக் கொண்டிருந்தார். அவரைப் பற்றி நண்பர் ஒருவர் பிரஸ்தாபித்த போது, சுஜாதா, சர்ச்சையைக் கண்டு கொள்ளாமல், சமீபத்தில் அந்த எழுத்தாளர் எழுதியிருந்த ஒரு ஹைக்கூவைப் பாராட்டி அதுதான் உண்மையான ஹைக்கூ என்றிருக்கிறார்!

திருப்பூர் கிருஷ்ணன் சுஜாதா பற்ய சில சுவையான தகவல்களைத் தந்தார். அம்பலம் மின்னிதழுக்கு வந்த ஒரு கேள்வி: திருவள்ளுவர் 1330 குறட்பாக்களை எழுதியிருக்கிறார். தலைப்பு திருக்குறள்கள் என்றல்லவா இருக்க வேண்டும்? பின் எப்படி திருக்குறள் என்று ஒருமையில் பெயரிட்டார்? 

இதற்கு சுஜாதாவின் பதில், திருவள்ளுவர் கள்ளை அறவே விலக்கி விட்டார்! 

நா.பா. தீபம் இதழில் ஒரு வெண்பாப் போட்டி வைத்திருந்தார். ஈற்றடி வேண்டாம் வரதட்சணை. வெண்பாப் பிரியர் சுஜாதா பிரபலமானவராக இருந்த போதும் ஒரு வெண்பா எழுதி அனுப்பினார்.

பத்துபவுன் தங்கம் பளிச்சென்று கல்வளையல்

முத்திலே சின்னதாய் மூக்குத்தி-மத்தபடி

பாண்டுவைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர

வேண்டாம் வரதட்சணை.சுஜாதாவுக்கு ஓவியம் வரைய, மாண்டொலின், வயலின் வாசிக்கத் தெரியும் என்பது இது வரை அறிந்திராத புதுச் செய்தி.

எழுத்தாளர் சுஜாதாவின் மகத்தான வளர்ச்சிக்கு நிஜ சுஜாதாவின் பங்கு பற்றி அறிந்தவர்கள் அத்தனை பேரும் புகழ்ந்து பேசினார்கள். வழக்கமான ஒவ்வொருவனின் வெற்றிக்குப் பின்னாலும் சமாசாரம் அல்ல இது. அப்படிப் பார்த்துப் பார்த்துப் பணிவிடை செய்திருக்கிறார் திருமதி.

கடைசி சில மாதங்களில், அவர் செய்யும் ஒவ்வொரு சின்னக் காரியத்துக்கும் தேங்க்ஸ் சொல்லுவாராம் திரு. படுக்கை விரித்துப் போட்டால் ஒரு தேங்க்ஸ், போர்த்தி விட்டால் ஒரு தேங்க்ஸ், மாத்திரை கொடுத்தால் ஒரு தேங்க்ஸ், அங்கலாய்த்திருக்கிறார் திருமதி. 

பொருளாதார ரீதியாக குடும்பத்தை அப்படி ஒன்றும் கஷ்டத்தில் விடவில்லை. என்றாலும் நிறைவு தினங்களில் அவர் மனைவியிடம் சொல்லியிருக்கிறார்: உன் பேரில் ஒன்றும் எழுதாமல் போகிறேனே? 

அதற்கு நிஜ சுஜாதா சொன்ன, அவர் மட்டுமே சொல்லியிருக்கக் கூடிய பதில், நீங்கள் எழுதியது எல்லாமே என் பேரில் தானே எழுதியிருக்கிறீர்கள்? 

நமக்குத் தெரிய வந்த இன்னொரு விஷயம், சுஜாதா அசாதாரணமான ஒரு சாதாரணர். மூன்றாம் வகுப்பு பையனுடன் கடி ஜோக் பரிமாறிக் கொள்வது, ஸ்கூட்டரில் பின்னால் உட்கார்ந்து சர்வ சகஜமாகப் பயணிப்பது, பீச்சில் ஆசை ஆசையாக மாங்காய்த் துண்டம் வாங்கிச் சாப்பிடுவது, பம்பரம் விடுவது இப்படி அத்தனையையும் செய்திருக்கிறார் இறுதி மாதங்கள் வரை. 

மிடாக்குடியரான எழுத்தாள நண்பருடன் ஹோட்டலில் சிப்சை (மட்டுமே) கொறித்தபடி, இலக்கிய சம்வாதம் செய்து கொண்டிருந்து விட்டு, அதிகாலையில் வயிறு பசிக்க உணவுக்கு அலைவது, நண்பர் வீட்டில் வெ சகஜமாக லுங்கியை வாங்கிக் கட்டிக் கொண்டு உரையாடிக் கொண்டிருப்பது, பீச்சில் சுண்டல் விற்கும் பையனுடன், ஹோட்டல் ரூம் பையனுடன் பந்தா இல்லாமல் விசர, இவை நாம் அவரிடம் புரட்டிப் பார்த்திராத பக்கங்கள்.

நமக்கு ஒரு சந்தேகம். நிறைய பிரமுகர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார் அவர். அதே போல எண்ணற்ற வாசகர்களுடன் நெருங்கிய நேரடி தொடர்பும் கொண்டிருக்கிறார். சுற்றுலா போவது, அவர்கள் வீட்டில் தங்குவது, விழாக்களில் கலந்து கொள்வது, சொந்தப் பிரச்சினைகளுக்குக் கூட சிந்தித்துப் பார்த்து ஆலோசனை கூறுவது. கவிதைகளைப் படித்து அபிப்பிராயம் சொல்வது மட்டுமல்லாமல் திரும்பத் திரும்ப திருத்தச் சொல்லி ஒரு வரும் வரை தொடர்ந்து அறிவுரை நல்குவது. 

இத்தனைக்கும் அவருக்கு நேரம் எப்படிக் கிடைத்தது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. பெரியோரை வியத்தலும் இலமே என்ற பாடலுக்கு ஒரு விதிவிலக்கு தேவை. சுஜாதா! நீங்கள் ஒரு யுக புருஷர்!BACK