விழிக்கும் ஏரி

எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரு பின்னிரவில் கொடைக்கானல் வந்து இறங்கினேன். மலை தெரியாத அளவு இரவு நிரம்பியிருந்தது. ஒளிரும் வெளிச்சங்கள் கூட மின்மினி பறப்பது போலதானிருந்தது. நல்ல குளிர்.  குளிராடையை மீறி உடம்பு நடுக்கம் கொண்டது. மலை நகரங்கள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன. 

தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு சென்று கதவை திறந்த போது கூடவே குளிரும் நுழைந்தது. முகம் பார்க்கும் கண்ணாடியெங்கும் குளிர் தெரிந்தது. கம்பளியை இழுத்து போர்த்திக் கொண்டு சுருண்டு கொண்டேன். உறக்கம் கொள்ளவில்லை. தாகமாக இருந்தது. எழுந்து தண்ணீர்பாட்டிலை எடுத்து குடித்தேன். அதுவும் குளிர்ந்திருந்தது. விடிவிளக்கின் வெளிச்சத்தில் உலகில் உள்ள எல்லா விடுதி அறைகளும ஒன்று போலாகிவிடுகின்றன. 

மரங்கொத்தி மரத்தினை இடைவிடாமல் கொத்திக் கொண்டிருப்பது போல குளிர்காற்று என் அறையின் கண்ணாடி கதவை லேசாக தட்டிக் கொண்டேயிருந்தது.

அறைக்கண்ணாடியை மீறி வெளிச்சம் உள்ளே எட்டிப்பார்த்தபோது  காலை விடிந்திருந்தது. மணியை பார்த்தேன் ஆறரை தான் ஆகியிருந்தது. ஜன்னலை லேசாக தள்ளி திறந்தேன். அதற்காகவே காத்திருந்தது போல குளிர் உள்ளே வேகவேமாக நுழைந்தது.  ஏரியை சுற்றி நடந்து வரலாம் என்று அறையிலிருந்து கிளம்பினேன். ஒன்றிரண்டு சைக்கிள்காரர்களும் நடைபயிற்சி செய்பவர்களும் முன்னால் சென்று கொண்டிருந்தார்கள். 

ஏரி சலனமில்லாமல் இருந்தது. படகுசவாரி துவங்கபடவில்லை. ஏரி இன்னமும் உறக்கத்தில் இருப்பது போலவே இருந்தது. அதிகாலை காற்றின் தூய்மை நுரையீரலை சுத்தப்படுத்தியது. ஏரியை சுற்றி நடந்து கொண்டேயிருந்தேன். உயர்ந்த மரங்கள். வெயில் மங்கிய ஆகாசம். பசுமை, சிதறியது போன்ற வீடுகள். வெறித்த சாலைகள். 

ஏரியை பார்த்தபடியே நடக்கும் போது வழியில் அமெரிக்க எழுத்தாளர் தோருவின் வால்டன் குளம் நினைவிற்கு வந்தது. தோரு குளத்தில் மிதக்கும் வாத்துகளை ஒரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டேயிருந்தார் என்ற குறிப்பு மனதில் தோன்றி மறைந்தது. என்ன ஒரு அனுபவம் அது. ஒரு மனிதனால் ஒரு நாள் முழுவதும் வாத்துகளை பார்த்துக் கொண்டேயிருந்திருக்க முடிகிறது என்பது எளிய விஷயமில்லை.  வாத்துகள் மாலையில் குளத்திலிருந்து திரும்பும் போது அதன் நடை மாறியிருக்கிறது என்பது தோருவின் நுட்பமான கண்டுபிடிப்பு. 

எல்லா பக்கமும் வாசல்கள் கொண்டது ஏரி என்பது தோரூவின் இன்னொரு பதிவு. இயற்கையின் முன்பு நமது செயல்கள் அர்த்தமற்று போய்விடுகின்றன. மிக நெருக்கமாக இயற்கையை அரவணைக்கும் போது நமது இருப்பு, எண்ணங்கள் மறைந்து நம் அகம் விழித்து கொள்கிறது. அது மண் மழையில் கரைவது போல உடனே தன்னை இயற்கையில் கரைத்து கொண்டுவிடுகிறது. 

இயற்கையின் வனப்பு பலநேரம் என்னை நடுக்கம் கொள்ள செய்திருக்கிறது. இவ்வளவு அழகை எப்படி மனது நிரப்பிக் கொள்ள போகிறது என்று ஏக்கம் கொண்டிருக்கிறேன். அப்போது உடலுக்கு இரண்டு கண்கள் மட்டுமில்லை என்பதையும் உணர்ந்திருக்கிறேன். மலைநகரங்களில் உள்ள மேகங்கள் அற்புதமானவை. அவை மாபெரும் ஒவியக்கலைஞனின் தன் இஷ்டம் போல வரைந்து கலைத்து போடும் சித்திரங்களை போல உருவாவதும் மறைவதுமாக இருக்கின்றன. 

ஏரியை எந்த பக்கமிருந்து பார்த்தாலும் ஒன்று போலதானிருக்கிறது. கண்களால் ஏரியை புரிந்து கொள்ள முடியாது என்று தான் தோன்றியது. என் முன்னே ஒரு குதிரை புல்வெளியை மேய்ந்துகொண்டிருந்தது. ஏரியின் மீது வெளிச்சம் பரவ ஆரம்பித்திருப்பது கண்ணில் பட்டது. அதை பார்த்தபடியே நின்றிருந்தேன். பறவை ஒன்று கிளையில் அமர்வது போல அத்தனை இயல்பாகவும் அழகாகவும் வெயில் ஏரியின் மீது இறங்கி அமர்ந்திருந்தது. 

ஏரியின் நிசப்தம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. எவ்வளவு ஆழ்ந்த நிசப்தமது. அத்தனை படகுகள் மனித எத்தனிப்புகள் எதுவும் ஏரியின் நிசப்தத்தை கலைக்க முடியவில்லை. சப்தமில்லாமல் ஒரு மேகம் தண்ணீருக்குள் நுழைந்து கொண்டிருந்தது தெரிந்தது.  ஏரியின் ஆழத்தில் நம் கண்ணுக்கு தெரியாத மீன்கள் நீந்திக் கொண்டிருக்க கூடும் என்று நினைத்தேன். 

தண்ணீர் எப்போதும் வியப்பளிக்க கூடியது. கடலாக இருந்தாலும் அருவியாக இருந்தாலும் ஏரி குளம் ஆறு என்று எந்த வடிவம் கொண்ட போதும் தண்ணீரின் வியப்பு சொல்லால் விளக்க முடியாதது. தண்ணீர் எதையும் அனுமதிக்கிறது. மலை எதையும் தனக்குள்ளாக அனுமதிப்பதில்லை. அது நம் குரலை தனக்குள் வாங்கிக் கொள்வதில்லை. திரும்ப எதிரொலித்துவிடுகிறது. மலையின் அகம் எதையும் உள்வாங்கிக் கொள்ளாதது போலும். சுற்றிலும் திரும்பி பார்த்தபோது மலை மௌனமாக என்னை போலவே ஏரியை பார்த்துக் கொண்டிருந்தது.

நான் நின்றிருந்த இடத்தின் அருகே சரிவிலிருந்து இறங்கி வந்த பூனைக்குட்டி ஒன்று சோம்பல் முறித்தது. பின்பு தன் வாலை ஆட்டியபடியே புல்வெளியில் இருந்த நீர்திவலைகளின் மீது புரண்டது. பின்பு முகத்தை சுழித்தபடியே சாலை நோக்கி நடந்து போக துவங்கியது.  மலை நகரங்களில் வளரும் பூனைகள் விசித்திரமானவை. அவை மிக தனிமையானவை.  எப்போதும் அதன் குரலில் ஒரு ஏக்கம் பீடித்திருப்பதை அறிந்திருக்கிறேன். அன்று பார்த்த பூனைக்குட்டி கூட சப்தமிடவேயில்லை.

மலை நகரங்கள் குறித்து தமிழில் அதிகம் எழுதப்படவில்லை. அதன் வாழ்க்கை இயல்பானதில்லை. மாறாக சின்னஞ்சிறு சந்தோஷங்களும் வியப்புகளும் நிரம்பியது. பயணிகளை தவிர்த்து உள்ளுர்வாசிகள் இந்த அற்புதங்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை. மலை நகரின் தேவாலயமும் அதன் மணியோசையும் எனக்கு பிடிக்கும். அது போலவே அதிகம் உரத்த குரலில் பேசாத மனிதர்களே மலை நகரில் இருக்கிறார்கள்.  அல்லது மனித குரல்களை இயற்கை தன் பசுமையால் ஒடுக்கி வைத்திருக்கிறது.

மலை நகரங்களில் எல்லா பெண்களும் அழகாகவே இருக்கிறார்கள். குளிர்படிந்த முகங்கள். வேகமில்லாத நடை. வழியெங்கும் பூக்கள் நிரம்பியிருந்த போதும் அதை  கூந்தல் நிறைய சூடிக் கொள்ள விரும்பாத அவர்களின் இயல்பு. அடர் நீலம் அல்லது சிவப்பில் மட்டுமே அதிக பேர் ஏன் ஸ்வெட்டர் போட்டு இருக்கிறார்கள் என்று இன்று வரை எனக்கு புரியவேயில்லை. 

நடந்து ஏரியின் மேற்கு பக்கம் வந்த போது விடிந்த போதும் அணைக்கபடாத ஒரு வீட்டின் வெளி விளக்குகளின் வெளிச்சத்தை பார்த்தபடியே இருந்தான். பகல்வெளிச்சத்தில் அந்த மின்சார விளக்கு ஒடுங்கி போயிருந்தது. இரவில் இந்த விளக்கு எத்தனை கர்வமாக இருந்திருக்கும் என்று நினைத்தபடியே அதை பார்த்துக் கொண்டிருந்தேன்.  மின்விளக்குகள் வராத நாட்களில் இந்த மலையும் ஏரியும் வேறு தோற்றத்தில் வேறு அழகில் இருந்திருக்க கூடும்.

ஒரு பள்ளிமாணவி காலணி ஒலிக்க நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவளது நடையில் பதற்றமில்லை. தனித்த ஒசையாக அது நீண்டு போனது. அதுவரை ஒரு பறவையை கூட காணவில்லை என்பது அந்த ஒசையின் போது தான் உணர்ந்து கொண்டேன்.  யாரும் இல்லாத அந்த சாலையை பார்த்துக் கொண்டிருந்தேன். மரங்களிலிருந்து உதிர்ந்த இலைகளை காற்று புரட்டிக் கொண்டிருந்தது.

மலையின் அடிக்கும் காற்று மூர்க்கமானது. அதில் பித்தேறியது போல சில நேரம் வேகமாவதும் மறுநிமிசமே அடங்குவதுமாக  இருக்க கூடியது.    

சுற்றி நடந்து ஏரியின் முக்கால்வாசியை கடந்த போது வெளிச்சம் உயர்ந்திருந்தது. சாலையோர கடைகள் துவக்கபட்டிருந்தது.  ஒரு கடையில் தேநீர் அருந்தியபடியே திரும்பும் ஏரியை பார்த்தேன்.தொட்டிலில் உறங்கும் குழந்தை விழிப்பது போல அழகும் மெல்லிய கால் உதைப்புமாக ஏரி விழிக்க துவங்கியிருந்தது. தேநீரை ஏரியை நோக்கி உயர்த்திக்காட்டியபடியே காலை வணக்கம் சொன்னேன்.

சுற்றுலா வாகனங்கள் வந்து சேர்ந்திருந்தன. ஆட்கள் சாலைகளில் நின்றபடியே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். 

ஒவ்வொரு நாளும் இந்த ஏரி ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறது. அதன் அழகு ஒவ்வொரு நாளும் புதுப்பொலிவு கொள்கிறது.

புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்த போது சாலையில் வெயிலோடிக் கொண்டிருந்தது. வாகனங்களின் ஒலி கேட்க ஆரம்பித்தது. பள்ளி நோக்கி மாணவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு வட இந்திய குடும்பம் சாலையில் உட்கார்ந்தபடியே கேரட் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தார்கள். அறைக்கு திரும்பி படுக்கையில் விழுந்தேன்

இந்த நகரில் எனக்கு ஒரு வேலையுமில்லை. எந்த காரணமும் இல்லாமல் வந்திருக்கிறேன். அடுத்து என்ன செய்யப்போகிறேன் ஒரு திட்டமும் இல்லை. அறையின் வெளியில் இருந்த வெயில் வடிந்து மேகம் மங்கியிருந்தது. அடுத்த சில நிமிசங்களில் மெல்லிய சாரல். 

கண்ணாடி ஜன்னலை பிடித்தபடியே சாரலை பார்த்துக் கொண்டிருந்தேன். மழையோடு ஏரியை சுற்றி வரலாமா என்று தோன்றிக் கொண்டிருந்தது. போவதற்குள் மழை நின்றுவிடும் என்றும் மனது சொன்னது. 

மலை நகரங்கள் நம்மை எளிதாக பற்றிக் கொண்டு அதன் விருப்பத்தில் நம்மை இழுத்தடிக்கின்றன. நாம் செய்யவேண்டியதெல்லாம் காற்றிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்ட காகிதத்தை போல அதன் போக்கில் நம்மை விட்டுவிடுவது மட்டுமே.

***

 http://www.sramakrishnan.com/