வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்

தேன் சேர்க்கிற தேனீக்கள் உண்டு. கூட்டிற்கு மரக்கழிவுகளைச் சேர்க்கிற குருவிகள் உண்டு. இவை தங்கள் நன்மைக்காகச் செய்து கொள்கின்றன.

மனிதர்களோ வருத்தங்களைச் சேர்க்கிறார்கள்.

எவ்வளவோ மகிழ்ச்சிகள் இருக்கிறபோது, கடற்கரையில் சிறுவர்கள் சிப்பிகளைச் சேகரிப்பதைப் போல் தங்கள் வாழ்வில் நிகழ்ந்து முடிந்துவிட்ட வருத்தங்களைத் தேடித் தேடிச் சேகரித்து வைத்துக் கொள்கிறார்கள்.

எவர் வீட்டில் மரணம் நிகழ்ந்தது இல்லையோ அவர் வீட்டிலிருந்து ஒரு கடுகு எடுத்துவா என்று மரணத்திற்காக ஓலமிட்டவனைச் சமாதானப் படுத்தியதாக ஒரு மூதுரை உண்டு. இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் வரும் நகைச்சுவைத் தொடர்களில் (?) ஒரு பஞ்ச் டயலாக்கின்போது சிரிப்பொலி கேட்பதைக் கவனித்திருப்பீர்கள். இது ஓர் ஆங்கில உத்தியாகும். லூஸி என்ற ஒரு மேலை நாட்டுத் தொலைக்காட்சித் தொடரில் இப்பாணி பின்பற்றப்பட்டது.

இந்த வியாதி நம்மவர்களையும் தொற்றிக் கொண்டுவிட்டது. இதற்கு ஸ்டாக் லாஃப் (Stock laugh) என்று பெயர். தொடரை எடிட் செய்ய அமரும் இதன் எடிட்டர், சரியான தருணம் பார்த்து இந்த ஸ்டாக் லாஃபை வெளியிடுவார்.

இது, தொடர் பார்ப்பவர்களை, இந்த இடங்களில் நீங்கள் சிரித்தாக வேண்டும் என்று மறைமுகமாக வற்புறுத்தும் கலையாகும். மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால்தான் நாம் சாதனைகள் பல படைக்கத் தூண்டுகோலாக இருக்கும்.

வருத்தங்கள் நிறைந்த மனது பிழிந்து முறுக்கி வைக்கப்பட்ட துவைத்த துணி மாதிரி, மகிழ்ச்சியால் ஆன மனம் துவைத்தும் உலர்த்துவதற்குப் பிரித்துப் போடப்பட்ட துணி மாதிரி. பயன்பாட்டிற்கு விரைவில் தயார்.

முறுக்கிய ஈரத் துணியோ, நாற்றம், பூசனம்!

வருத்தங்கள் நம்மிடம் ஓட்டிக் கொள்கிறபோது நம் வாழ்வில் எத்துணையோ மகிழ்ச்சிகரமான கணங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். நாம் வென்று வெளிவந்த சோதனைக் களங்களை நினைவூட்டிக் கொள்ள வேண்டும். ஸ்டாக் லாஃபை சரியான தருணத்தில் வெளிவிடும் எடிட்டர் போல!

லேனா தமிழ்வாணன் (http://www.tamilvanan.com/)

***************