அறுபதுகளின் அனுகூலம்

நான் அறுபதுகளில் பிறந்தவன்.

அறுபதில் பிறந்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும்.  திரைப்படப்பாடல்கள் கேட்பது எனக்கு மிகவும் பிடித்தது.  நல்ல இசை  – செந்தமிழோ, சுந்தர தெலுங்கோ, தேசிய மொழியாகத் துடித்துக் கொண்டிருக்கும் ஹிந்தியோ -  எந்த மொழியும் சொந்த மொழி போல பாடல் கேட்க பிடிக்கும்.

சிறு வயதில் டி.எம்.எஸ்., பி.பி.எஸ்., ஏசுதாஸ், பி.சுசீலா, ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பாடல்கள் வானொலியில் கேட்டுக்கொண்டே வளர்ந்து பெரியவனாகியபோது மேலே குறிப்பிட்டவர்களோடு  எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன், மனோ, சித்ராவும் சேர்ந்து கொண்டார்கள்.

இளையராஜா வருவதற்கு முந்திய தமிழிந்தியாவில் ரஃபி, கிஷோர்குமார், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே பாட்டு கேட்டவர்களில் நானும் ஒருவன்.  ஆனால், “ஐ ஒன்லி ஹியர் ஹிந்தி சாங்ஸ்” ஆளில்லை நான்.

திரைப்பட பாடல்கள் கேட்பவர்கள், எல்லா காலங்களிலுமே பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என்று வகைபடுத்திக் கொண்டேயிருப்பார்கள்.  என்னுடைய இளம் வயதில், டி.எம்.எஸ்., பி.பி.எஸ். குரல்களில் கேட்ட பாடல்கள் புதிய பாடல்கள்; 1940, 1950 களில் வந்த பாடல்கள் பழைய பாடல்கள்.

டேப் ரிகார்டர் எல்லாம் அப்போது கிடையாது. வானொலியில் ”உங்கள் விருப்பம்” என்று சொல்லி, சிலருடைய வானொலியில் பெயர் கேட்கும் விருப்பத்தை பூர்த்தி செய்து ஒலிபரப்பான இரு காலத்திய பாடல்களையும் நான் மிகவும் அனுபவித்து கேட்பேன்.  நடு எழுபதுகள் வரை வானொலிதான்.

70களின் இறுதியில் ஒரே ஒரு சானலுடன் டி.வி. அறிமுகமாகி  இன்னும் அதிகமாக பாடல்கள் கேட்க வாய்ப்பு கிடைத்தது.  80களுக்கு வரும்போது, பாடல்கள் இன்னொரு பிரிவு பெற்று, மிகப்பழைய பாடல்கள் (தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், எம்.எஸ்.), பழைய பாடல்கள் (டி.எம்.எஸ்., பி.பி.எஸ்., சுசீலா, ஜானகி, வாணி ஜெயராம்), புதிய பாடல்கள் (எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன், தீபன் சக்கரவர்த்தி, ஜென்ஸி, உமா ரமணன்) என்றானது.

ஆனாலும், என்னால் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை எம்.எஸ்.வி., இளையராஜா ஆகியோரின் புதிய இசையில் கேட்கும் அதே உற்சாகத்துடன் எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், எம்.எஸ்., பாடல்களையும் கேட்கப்பிடித்தது.  பாலசுப்ரமணியத்தின் குரல் தரும் மயக்கத்தை பாலமுரளியின் குரல் அதிகரிக்கவே செய்தது. ஒரு நாளும் ”இது பழைய பாட்டு” என்று அலுப்பு தந்ததில்லை.

இப்போது இன்னும் காலம் ஓடி 2010க்கு வந்தாகிவிட்டது. இளையராஜாவை தொடர்ந்து  தேவா, ரஹ்மான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன், ஸ்ரீகாந்த் தேவா, விஜய் ஆண்டனி, தேவி ஸ்ரீப்ரசாத், பரத்வாஜ் என்று புதிய இசையமைப்பாளர்கள் புதுப்புது இசையை தந்து கொண்டிருக்கிறார்கள்.

இசையின் சந்தமும், சத்தமும் மாறிவிட்டது.  திரைப்படங்களும், இசைக்கும் தொழில் நுட்பமும், இசையை பதிக்கும் தொழில்நுட்பமும், அதை கேட்கும் தொழில் நுட்பமும் பன்மடங்கு முன்னேறிவிட்டது.

கொஞ்சம் யோசித்து பார்த்தால், இப்போதும் என்னால் 1940 முதல் 2010 வரையான எல்லா திரை இசையையும் ரசிக்க முடிகிறது.

என் அப்பா 1920களில் பிறந்தவர்.  அம்மா 1930களில். அவர்களால் 1940லிருந்து, 1970வரை வந்த இசையை மட்டுமே ரசிக்க முடிகிறது.  அதற்கு பிறகு வந்த இசையை “சத்தம்” என்று நினைக்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் தயக்கத்துடனேயே இளையராஜாவின் பாடல்களை கேட்பார்கள், யுவன் வரை போவதற்கு அவசியமே இல்லை.

60களில் பிறந்த என்னால், என் முந்தைய தலைமுறையிலிருந்தும் (பெற்றோர்), பிந்தைய தலைமுறையிலிருந்தும் (மகன்கள்)  வித்தியாசப்பட்டு எழுபது வருட இசையை கேட்டு ரசிக்க முடிகிறது. ”சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன்” என்று எம்.கே.டி.யையும், “நான் அடிச்சா தாங்க மாட்டே” என்று விஜய் ஆண்டனியையும் கூட சேர்ந்து பாடிக்கொண்டே, உதட்டால் விசில் மீட்டிக்கொண்டே உற்சாகத்துடன் ரசிக்க முடிகிறது.

சிவாஜி கணேசனின் “எங்கே நிம்மதி”யும், விஜயின் “புலி உறுமுது”வும் கேட்டு மகிழ முடிகிறது.

மிகவும் இதய வருடலாக ”தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே” என்ற சுசீலாவையும், ”சித்திரப்பூ போலே சிதறும் மத்தாப்பு, தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு” என்று தீபாவளி கொண்டாடிய ஜிக்கியையும், ”சிங்கார வேலனே தேவா” என்று எது நாதஸ்வரம் எது மனிதக்குரல் என்று இனம்பிரிக்க முடியாத இனிய குரலில் இசைத்த ஜானகியையும் கேட்டு மகிழ்ந்தது போலவே சித்ரா, மஹதி, அனுராதா ஸ்ரீராம், ஷ்ரேயா கோஷல், மாலதிகளை கேட்டு மகிழ முடிகிறது.

சமீபத்தில் சென்னை சென்றபோது, நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா தொகுத்து வழங்கிய ”Tribute to Sivaji Ganesan” இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.  நடிகர் திலகத்தின் திரைப்படங்களிலிருந்து இனிமையான பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன். அடுத்த நாள், வேட்டைக்காரன் படம் பார்க்கும்போது அதன் பாடல்கள் அனைத்தையும் ரசித்தேன்.

இது அறுபதுகளில் பிறந்ததினால் கிடைத்த வாய்ப்பு என்று நினைக்கிறேன்.  நான் வளர வளர திரை இசையும் தொழில் நுட்பமும் வளர்ந்ததால் என்னால் 70 வருட இசையை ரசிக்கமுடிகிறது.  இசை ஒரேயடியாக புதிதாக இல்லாமல், பல வருட இசையின்  மாற்றம் அது மெதுவாக உருவாக உருவாக என் காதுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகமானதால், பழகிவிட்டது என்று நினைக்கிறேன்.

என்னுடைய பிள்ளைகள் 1990ல் பிறந்தவர்கள். அவர்களுக்கு நடு எண்பதுகளிலிருந்து இப்போது வரையான இசையை கேட்க பிடிக்கிறது. அதற்கு முன்பு வந்த பாடல்களை போட்டால், காதில் ஐபாட் மாட்டிக்கொண்டு நகர்ந்துவிடுவார்கள்.  எல்.ஆர். ஈஸ்வரி  ”பட்டத்து ராணி பாஆஆர்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்” என்ற கணீர் நடுக்கக்குரலின் வித்தையும், “எலந்த பயம், எலந்தபயம்” என்ற கூவலின் குதூகலமும் அவர்களுக்கு புரிவதில்லை.

எம்.கே.டி., பி.யு. சின்னப்பா, மன்னா டே, மகேந்திர கபூர் பெயர் சொன்னால் “உன்னோட சி.ஏ. படிச்சாளா” என்று கேட்பார்கள்.

******

டி.பி.ஆனந்த், துபாய் (T P Anand, Dubai, UAE) (http://www.sathyamurthy.com/)